புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்காக காத்திருக்கும் தொண்டர்கள்

புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்காக காத்திருக்கும் தொண்டர்கள்

முதல் - அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "சென்னை மாநகராட்சியில் வெள்ளம் வடிந்த இடங்களில் சுகாதாரத்தைப் பேணுவதற்காக மாநகராட்சி துப்புரவு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி பகுதியில் தற்பொழுது 25 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குப்பைகளை விரைந்து அகற்றும் பொருட்டு மேலும் 5 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள் பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரவழைக்கப்படுவர். மேலும், தேவைக்கேற்ப சென்னை மாநகரத்தில் துப்புரவு பணியாளர்கள் தினக்கூலி அடிப்படையில் பணி அமர்த்தப்படுவர். அவர்களுக்கு நாளொன்றுக்கு 300 ரூபாய் வழங்கப்படும். இந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்ற விரும்புவோர் சென்னை மாநகராட்சியின் மண்டல அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம்." என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக 8.12.15 அன்று ஒரு நாளிதழில் வெளிவந்த இந்த செய்திக்கு மக்களின் கருத்தை கேட்டோம். 

"துப்புரவு பணியாளர்கள் மட்டும் போதாது, அனைவரும் ஒன்றுபட்டால் மட்டுமே குறுகிய நாட்களில் குப்பைகளை அகற்றமுடியும். புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைப்படி, ஆர்.கே நகர் தொகுதி வெற்றிக்காக, பல மாவட்டங்களில் இருந்து தொண்டர்கள் சென்னைக்கு சென்று தங்கியிருந்து பணியைச் செய்தோம். அதுபோன்று, இந்தப்பணிக்கும் புரட்சித்தலைவி அம்மாவின் ஆணைக்காக  காத்திருக்கிறோம். அம்மாவின் ஆணைவந்தவுடன் நிச்சயமாக சென்று பணியை குறுகிய காலத்தில் முடித்துக்காட்டுவோம்." என்கிறார் அதிமுகவின் தொண்டர்.

"துப்புரவு பணிக்கு ஆட்கள் தேவை என்று சொல்கிறார்கள். சம்பளம் குறைவாக இருக்கிறதே. விலைவாசி ஏற்றத்தினால், ஒரு நாளைக்கு என் குடும்பத்திற்கு 600 ரூபாய் செலவாகிறது. 300 ரூபாயை வைத்து நான் என் குடும்பத்திற்கு என்ன செய்யமுடியும். ஒரு நாள் சம்பளமாக 500 ரூபாய் கொடுப்பாங்களா?. 100 பேர் நாங்கள் ரெடியாக இருக்கிறோம்". என்கிறார் வேலுச்சாமி, கூலி வேலைக்குச் செல்பவர்.

"சமூக ஆர்வலர்களாகிய நாங்கள் 30 பேருடன் சென்னைக்கு புறப்படுகிறோம். ஏரியை தூர்வாரிய எங்களால் இதை செய்யமுடியாதா?. வெள்ளம் வடிந்த இடங்களில், சுகாதாரத்தைப் பேணுவதற்காக துப்புரவு பணிகளைச் செய்ய இன்றே கிளம்புகிறோம்". என்கிறார் குமார், சமூக ஆர்வலர்.

"மழை வெள்ளத்தினால், என் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் பழுதடைந்துவிட்டது, சில பொருட்கள் காணாமலும் போய்விட்டது. பீரோ, கட்டில், மெத்தை, பிரிட்ஜ் என அனைத்துப் பொருட்களும் லோன் போட்டுதான் வாங்கினேன். அந்த பொருட்கள் எல்லாம் மறுபடியும் பயன்படாது. கஷ்டப்பட்டு சம்பாதித்து வாங்கிய பொருட்கள் அனைத்தும் வீணாகிப் போய்விட்டது. அதனை வாங்க, நான் மறுபடியும் மூன்று வருடம் கஷ்டப்பட வேண்டும். லோன் கட்டுவதா?, புது பொருட்கள் வாங்குவதா?. என்பது தான் பெரிய கேள்விக்குறியாக இருந்து வருகிறது" என்கிறார் ராஜா, மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்.