சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருசக்கர மற்றும் ஆட்டோக்களுக்கு இலவச சர்வீஸ்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கான இலவச வாகன பழுது பார்க்கும் முகாம் 12.12.2015 முதல் 21.12.2015 வரை 10 நாட்கள் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் பெய்த கன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. பெருமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நீரில் மூழ்கியதால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தற்போது வெள்ளம் வடிந்து விட்ட நிலையில் இவற்றை உடனடியாக பழுது பார்க்க வேண்டி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கு எவ்விதக் கட்டணமுமின்றி பழுதுகளை நீக்கி சர்வீஸ் செய்து தரும்படி டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிமிடெட், இந்தியா யமஹா லிமிடெட், பஜாஜ் மோட்டார்ஸ் லிமிடெட் மற்றும் ஐஷர் மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களை கேட்டுக் கொண்டேன். அதனடிப்படையில் இந்த நான்கு நிறுவனங்களும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் ஆகியவற்றுக்கு நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பழுதுகளை எவ்வித கட்டணமுமின்றி பழுது நீக்கி சர்வீஸ் செய்து தருவதாக தெரிவித்துள்ளன" என்று குறிப்பிட்டிருந்தன.