உஷாரா இருங்க?.. ரூ.2.5 லட்சம் மோசடி. மேலும் படிக்க

துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.5 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவனத்தின் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். 

கோவை பி.என்.பாளையத்தைச் சேர்ந்த சுரேஷ் (28) மற்றும் அவரது நண்பர் ஆகியோர் மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜிடம் "கோவை வேலாண்டிபாளையத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் துபையில் சி.என்.சி. ஆபரேட்டர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவதாக தனியார் தொலைக்காட்சியில் விளம்பரம் வெளிவந்தது. இதையடுத்து குறிப்பிட்ட நிறுவனத்துக்கு நேரில் சென்றபோது சி.என்.சி.ஆபரேட்டர் பணிக்கு ரூ. 2.5 லட்சம் செலுத்த வேண்டும் எனக் கூறினார். இதனை நம்பி பணம் செலுத்திய பின் எங்களை கடந்த ஜூலை மாதம் துபைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் கூறியபடி சி.என்.சி.ஆபரேட்டர் பணி வழங்காமல் கட்டுமானப் பணிகளை ஒதுக்கினர். இதுகுறித்து கேட்டபோது இப்பணிக்காக தான் ஆட்கள் தேர்வு செய்துள்ளதாக துபாய் நிறுவனம் தெரிவித்தது. இதையடுத்து, விசாவை ரத்து செய்து கோவை திரும்பினோம். இதுகுறித்து தனியார் நிறுவனத்திடம் கேட்டபோது பணத்தை திரும்ப ஒப்படைப்பதாக தெரிவித்தனர். ஆனால் குறிப்பிட்டபடி பணத்தை தராமல் தற்போது மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, தனியார் நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்து, எங்களது பணத்தை மீட்டுத் தரவேண்டும்" என்று தெரிவித்துள்ளனர்.

லட்சக்கணக்கில் செலவு செய்து தொலைக்காட்சியில் விளம்பரம் கொடுப்பவர்கள், நம்மிடம் வசூலிக்கத்தானே செய்வார்கள். விளம்பரத்தை நம்பி ஏமாற வேண்டாம். கன்சல்டன்ட் ஆக இருந்தால், மத்திய அரசிடம் பதிவு செய்துள்ளார்களா என்று விசாரித்து விண்ணப்பிக்க வேண்டும்.