மலிவான விலையில் சென்னையில் இருக்கும் ஒரு லட்சம் வீடுகளில் மாடித் தோட்டம்.

நகர்ப்புறங்களில் உள்ள மக்கள் அவர்களுக்குத் தேவையான காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அவர்களே உற்பத்தி செய்யும் வகையில், மாடித் தோட்டம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தில் ஆர்வமிக்க பொது மக்களுக்கு விதைகள், செடிகள் ஆகியவற்றை அளித்து அதற்கான பயிற்சிகளும் கொடுக்கப்படுகிறது. அதன்படி, சென்னை நகரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மாடித் தோட்டம் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இந்த நிலையில், மாடித் தோட்டம் திட்டத்தை பரவலாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒரு லட்சம் வீடுகள் இலக்கு:

சென்னை நகரில் சுமார் ஒரு லட்சம் வீடுகளில் மாடித் தோட்டம் முதல்கட்டமாக செயல்படுத்தப்படுகிறது. மாநகரில் 200 வட்டங்களையும் சேர்த்து 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வாய்ப்புள்ள இடங்களில் மாடித் தோட்டங்களை அமைக்கலாம்.

மாடித் தோட்டத்துக்கான விதைகள், செடிகள் ஆகியன  மலிவான விலையில் கிடைக்கும். ரூ.500 விலையில் மண், வெண்டை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட காய்கறிகள், பழங்களின் விதைகள் அல்லது செடிகள் ஆகியன ஒரு தொகுப்பாக அளிக்கப்படும்.

பூங்காக்களே விற்பனை இடம்?.

சென்னை மாநகரில் 500 பூங்காக்கள் உள்ளன. அதில், தினந்தோறும் 100 பூங்காக்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் மாடித் தோட்டத்துக்கான விதைகள், செடிகள் அளிக்கப்படும். அவ்வாறு வழங்கப்படும் செடிகள், விதைகள் வளர்வதில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அதனை உடனடியாகத் தீர்ப்பதற்கும், மாடித் தோட்டம் திட்டத்தை மக்களிடம் பிரபலப்படுத்தவும் 100 தோட்டக்கலை ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுவர். அவர்கள் அரசு மூலமாக தேர்வு செய்யப்படுவர். 100 ஊழியர்களும் மாடித் தோட்டத்துக்கான செடிகள், விதைகளை தினமும் பூங்காக்களில் விற்பனை செய்யும் பணியிலும் ஈடுபடுத்தப்படுவர். சென்னை மாநகராட்சியும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் பணியில் தன்னை இணைத்துக் கொள்ளும். மாடித் தோட்டம் மூலமாக தரமான, பூச்சிகள் இல்லாத காய்கறிகளை நகர மக்களே உற்பத்தி செய்ய வழி ஏற்படும் என்று அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment