20 வருடத்திற்கு முன் ஆறு, ஓடை, வாய்கால் என எங்கு பார்த்தாலும் சுத்தமான நீர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நீச்சல் அடிக்காதவர்களே இல்லை. வாய்க்கால் நீரை அப்படியே கையில் எடுத்து குடிநீராகப் பயன்படுத்துவோம். எவ்வளவு கஷ்டம் இருந்தாலும், நண்பர்களுடன் நீச்சல் விளையாட்டு விளையாடினால் போதும். மனதும், உடலும் வலிமையுடன் இருக்கும். இவை அனைத்தும் இனி வெறும் நினைவுகளாக மட்டும் இருக்குமே தவிர, நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்பதே கேள்விக்குறி?. நம் வாரிசுகளுக்கு சுத்தமான குடிநீரையாவது விட்டு வைப்போமா என்றால் அதற்கும் ஒரு கேள்விக்குறி?. கேள்விகளுக்கான விடைகளை மனிதர்களால் மட்டுமே பூர்த்தி செய்யமுடியும். நம் வீடு/ கடை சுத்தமாக இருந்தால் மட்டும் போதும், நாடு அசுத்தமாக இருந்தால் நமக்கு என்ன என்று நினைக்கும் பலருக்கு தன் வாரிசுகளைப் பற்றிய கவலையில்லை என்பதே உண்மை..
Article by www.kongumalar.com
தெரிந்தோ, தெரியாமலோ நீர்நிலைகளை அசுத்தம் செய்துவருபவர்களுக்கு சில வேண்டுகோள்?.
1. "குப்பைகளை எங்கு கொட்ட வேண்டும்" என்று குழந்தைகளைக் கேட்டால் "குப்பைத்தொட்டி" என்று பதில் சொல்வார்கள். ஆனால், பெரியவர்கள் நீர் நிலைகளில் கொட்டி வருகிறார்கள். குழந்தைகளுக்குத் தெரியும் விஷயம் ஏன் பெரியவர்களுக்குத் தெரியவில்லை.
2. குப்பை என்றால் "மனிதர்களுக்கு எதிரி". ஆம், குப்பைகளில் இருக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை எரித்தால் கேன்சர், ஆஸ்துமா போன்ற நோய்கள் நம்மை துரத்திக்கொண்டே இருக்கும். கழிவுகள் ஒரு இடத்தில் தேங்கிநின்று தண்ணீரை செல்லவிடாமல் வெள்ள அபாயத்தை ஏற்படுத்தும்.
3. சென்னையில் மினரல் வாட்டர் பற்றாக்குறை என்றால் குடிக்க தண்ணீர் கிடையாது. கஷ்டப்பட்டு கூவநதியை அசுத்தமாக்கி, மினரல் வாட்டர்களை காசு கொடுத்து வாங்குகிற பெருமை தமிழர்களுக்கு மட்டும்தான் சேரும். இதே நிலைமை தமிழ்நாடு முழுவதும் வந்துகொண்டிருக்கிறது. ஆம், தமிழ்நாட்டில் 80 சதவீத மக்கள் மினரல் வாட்டர்களைத் தான் குடிநீராக பயன்படுத்தி வருகிறார்கள். இன்னும் சில வருடங்களில் சாக்கடை நீரை சுத்தம் செய்து, குடிநீராக பயன்படுத்த வேண்டிய நிலை வந்தாலும் சொல்வதற்கில்லை.
இவைகளை எல்லாம் விட ஒரு முக்கியமான விஷயம் உங்களுக்குத் தெரியுமா?.
நீர்நிலைகளை அசுத்தம் செய்து, மறைமுகமாக நாம் அபராதம் செலுத்தி வருகிறோம். "தூய்மை இந்தியா" திட்டத்திற்காக 14 சதவீதமாக இருந்த சேவை வரியை 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளது மத்திய அரசு. இதன் மூலம் மத்திய அரசுக்கு வருமானமே தவிர, நமக்கு எந்தவித பயன்களும் இல்லை. ஆம், நீர்நிலைகளை அசுத்தம் செய்துவரும் பழக்க வழக்கம் நம்மிடம் மாறவில்லை எனில் எவ்வளவு சுத்தம் செய்தாலும், பணம் மட்டும்தான் வீணாகிக்கொண்டே இருக்கும். மாறுவோம், மாற்றித்தினை கொண்டு வருவோம்.
No comments:
Post a Comment