பொதுவாக மத்திய அரசாங்கம், தனது ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் உள்ள சம்பளவிகிதம் மற்றும் அலவன்சுகளை சீரமைக்கவும், பென்ஷன் தொகையை மாற்றி அமைக்கவும், 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளக்குழுவை அமைப்பது வழக்கம்.
முதலாவது சம்பளக்குழு 1946–ம் ஆண்டு அமைக்கப்பட்டு மத்திய அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.35 ஆக நிர்ணயித்தது.
இரண்டாவதாக 1959–ம் ஆண்டு நியமிக்கப்பட்டு ரூ.80 ஆகவும், 1973–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 3–வது சம்பளக்குழு ரூ.185 ஆகவும், 1986–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 4–வது சம்பளக்குழு ரூ.750 ஆகவும், 1996–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 5–வது சம்பளக்குழு ரூ.2,550 ஆகவும், 2006–ம் ஆண்டு நியமிக்கப்பட்ட 6–வது சம்பளக்குழு ரூ.6,650 ஆகவும் குறைந்தபட்ச அடிப்படை சம்பளத்தை நிர்ணயித்தது.
பொதுவாக சம்பளக்குழுக்கள் நியமிக்கப்பட்ட நாளிலிருந்து அறிக்கை தாக்கல் செய்ய 18 மாதங்களை எடுத்துக்கொள்ளுமாம். 2015, ஆகஸ்டு மாதமே தன் பரிந்துரையை அளித்து இருக்கவேண்டும். ஆனால், கூடுதலாக 3 மாதங்களை எடுத்துக்கொண்டு, 19.11.15 அன்று பரிந்துரை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இந்த அறிக்கையில் மத்திய அரசாங்க ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ.18 ஆயிரமாகவும், அதிகபட்ச சம்பளம் ரூ.2 லட்சத்து 25 ஆயிரமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு இந்த சம்பளக்குழு 23.55 சதவீத சம்பளஉயர்வு கிடைக்கும் வகையில் வழிவகை செய்துள்ளது.


இதன்மூலம் 47 லட்சம் மத்தியஅரசு ஊழியர்களும், 54 லட்சம் பென்சினர்களும் பயன்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. சம்பள உயர்வால் அரசாங்கத்துக்கு கூடுதலாக ஆண்டுக்கு ஒரு லட்சத்து 2 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகுமாம். இந்த பரிந்துரையை பரிசீலித்து, சம்பள உயர்வு தொடர்பான இறுதி அறிவிப்பை அநேகமாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் தாக்கல் செய்யும் பொது பட்ஜெட்டில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பரிந்துரையில் ஒப்பந்த ஊழியர்கள் ஊதியம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. செயல்திறன் அடிப்படையில் சம்பளம் என்ற பரிந்துரை வரவேற்கப்படத்தக்கது.
7–வது சம்பளக்குழு பரிந்துரையை பரிசீலித்து அமலுக்கு கொண்டு வந்து, மத்திய அரசாங்க ஊழியர்களுக்கு கிடைக்கும் வருமானம் உயர்ந்தால் லஞ்சம் வாங்காமல் இருப்பார்களா?. அல்லது ஊக்கத்தொகையாக வைத்துக்கொண்டு மக்கள் பணியை சிறப்பாக செய்வார்களா?.. என்பதே கேள்விக்குறி!!!!