ஈரோட்டில் ஈரோடையை பார்த்திருக்கீங்களா?.


இரண்டு ஓடையை மையமாக வைத்துத்தான் ஈரோடு என்று பெயர் பெற்றது. ஆனால், தற்போதைய இளைஞர்களுக்கு ஈரோடை எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது. தண்ணீர் குறையாமல் இருந்துவந்த ஓடைகள், சாக்கடை நீரும், சாயக்கழிவு நீரும் கலந்து சென்னை கூவம் நதிபோல் காட்சியளிக்கிறது. ஈரோடை சுற்றிப்பார்க்க வருபவர்கள் சாக்கடை நாற்றத்தை சுவாசிப்பவர்களே இல்லை. வெளிநாட்டில் இருந்து சுற்றுலா பயணியாக வந்த ஒருவர், பெரும்பள்ளம் ஓடையை போட்டோ எடுத்து ஈரோட்டின் வரலாற்றுச் சின்னம் என்று தன் மொபைலில் வைத்திருந்தார். எப்படி இருந்த ஈரோடு, இப்படி ஆகிவிட்டதே என்று கவலைப்படாதவர்களும் இல்லை. அரசு அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துப் பார்த்துவிட்டார்கள். திடீரென்று ஒரு நாள், சில இளைஞர்கள் ஒன்று சேர்ந்து பெரும்பள்ளம் ஓடையை சுத்தம் செய்யலாம் என்று பெரும்பள்ளம் ஓடையை பார்வையிட்டார்கள். என்ன செய்தாலும், ஓடையை சுத்தம் செய்வது கஷ்டம் என்று பலரும் நினைத்தோம். அடுத்த நாள், ஓடையை சுத்தம் செய்வதற்காக இயந்திரங்களை கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு, ஈரோடை மாற்றியே ஆக வேண்டும் என்கிற ஆதங்கம். கடின உழைப்பு, நாற்றத்தையும் பொருட்படுத்தாமல் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். விளையாட்டாக எடுத்த பணி, ஒரு மாதத்தில் பெரும்பள்ளம் ஓடையை பழையது போல் மாற்றியிருக்கிறார்கள். இளைஞர்கள் ஆரம்பித்துவைத்த இந்த பணியில் நாம் உதவி செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை. ஓடையை சுத்தமாக வைப்பதுதான் நம் கடமை இருக்க வேண்டும்.

எழுத்து: www.kongumalar.com

"டெங்கு, மலேரியா, டைஃபாய்டு நோய்களால், பெரும்பள்ளம் ஓடையில் சுற்றியிருக்கும் மக்கள் அவதிப்பட்டுவந்தார்கள். மழை காலங்களில் நோய்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். பெரும்பள்ளம் ஓடையில் சாக்கடை நீர் கலந்து, கழிவுகள் தேங்கி இருப்பதனால் தான் இதற்குக் காரணம். இதை ஏன் சுத்தம் செய்யக்கூடாது என்று நினைத்தோம். பழைய ஓடையை போன்று மாற்றம் கொண்டுவர முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, தண்ணீரை தேங்கவிடாமல் செய்யவேண்டும் என்பதே எங்களின் நோக்கமாக இருந்தது. சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தோம். ஒரு மாதத்தில் மழை, வெயிலையும் பார்க்காமல் 70 சதவிகித வேலைகளை முடித்துவிட்டோம். ஓடையை முழுவதுமாக சுத்தம் செய்தபின்னர், ஓடையை சுற்றி இருக்கும் பகுதிகளில் வாக்கிங் செல்லும் விதமாக கான்கிரிட் வழி போட இருக்கிறோம். அருகில் இருக்கும் பகுதி மக்கள் குப்பைகளை ஓடையில் கொட்டாமல் இருப்பதற்காக, ஒவ்வொரு வீட்டிற்கும் குப்பைத்தொட்டியை இலவசமாகக் கொடுத்துள்ளோம். மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறோம். நிச்சயம் மாற்றம் ஏற்படுத்துவோம்" என்கிறார் ஈரோடை இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சுதாகர் கந்தசாமி.

பெரும்பள்ளம் ஓடையை மாற்றம் கொண்டு வந்த ஈரோடை இயக்கத்தினர்களான ஈரோடு ஸ்பைஸ் ரவுண்டேபிள் 211, செல்வா சேரிட்டபிள் டிரஸ்ட், UNWO மஸ்ஜீத் சேவைக்குழு, சி.எஸ்.ஐ யூத் கிரிஸ்ட்டியன் கமிட்மெண்ட், ஈரோடு சிறகுகள், ஒளிரும் ஈரோடு குழுவினர்களுக்கு ஈரோடு மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

அதிகாரிகளுக்கு ஒரு வேண்டுகோள்....

நீங்கள் செய்யும் வேலையை சமூக ஆர்வலர்கள் செய்துமுடித்துவிட்டார்கள். சாக்கடை கழிவுகளை பெரும்பள்ளம் ஓடையில் கலங்காமல் இருக்க என்ன செய்யப்போகிறீர்கள்?. மாற்றம் உங்களிடம் இருந்தும் வர வேண்டும். மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். நீங்கள் மனசு வைத்தால் நிச்சயம் சுத்தமான ஓடையாக மாற்ற முடியும்.

No comments:

Post a Comment