மேம்பாலம் கட்டுங்கம்மா... அப்புறம் வெளிநாட்டு கம்பெனிக்கு அனுமதி தரலாம். உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாடு பற்றி தமிழக மக்களின் குரல்கள் கீழே பதிவு செய்யப்பட்டுள்ளன...

உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஆஸ்திரேலியா, பிரான்ஸ், கனடா, இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, இங்கிலாந்து, மொரிசீயஸ் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சுமார் ஆயிரம் முதலீட்டாளர்களும், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களில் இருந்து சுமார் 4 ஆயிரம் முதலீட்டாளர்களும் என மொத்தம் 5 ஆயிரம் தொழில் முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் என்ன சொல்கிறார்கள் என்று மக்களிடம் கேட்டோம்..

"எத்தனை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வந்தாலும், தமிழ்நாட்டுக்கு ஒன்றும் வருமானம் வரப்போவதில்லை. நம் தமிழகத்தில் இருக்கும் வளங்களை அழித்து நாசம் மட்டுமே ஆக்குவார்களே, தவிர நல்லது செய்ய யாரும் வரமாட்டார்கள். தமிழ்நாடை வைத்து அவர்கள் மட்டுமே சம்பாதிப்பார்கள். கோ-கோ கோலா கம்பெனி தான் இதற்கு எடுத்துக்காட்டு" என்கிறார் ரமேஷ் (மளிகைக் கடை வைத்திருப்பவர்)

"தமிழ்நாட்டில் எத்தனையோ நிறுவனங்கள் இயங்கி வருகிறது. முதலில், இந்த நிறுவனங்களுக்கு சலுகைகளை செய்தாலே போதும். மின் கட்டணத்தை உயர்த்தியதில் இருந்து கோவையில் இருக்கும் சில நிறுவனங்கள் நஷ்டத்தால் மூடிக்கிடக்கின்றன. அதனால், ஆயிரக்கணக்கான மக்களுக்கு வேலையில்லை. நம்ம மக்களை கொஞ்சம் கவனியுங்க, அப்புறம் வெளிநாட்டு மக்களை வரச்சொல்லலாம்". என்கிறார் நிறுவனம் மூடியதால் வேலை வாய்ப்பை இழந்த குமார்.

"நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய பல நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்துவருகிறோம். ஆஸ்திரேலியாவுக்கு நம் சென்னை துறைமுகத்தில் இருந்து 15 நாட்களில் செல்ல வேண்டும். ஆனால், சென்னை துறைமுகத்திற்குள் செல்ல வேண்டும் என்றாலே போக்குவரத்து நெரிசல் காரணமாக ஒரு வாரம் ஆகிவிடுகிறது. பொருட்கள் செல்ல காலதாமதம் ஆனால், ஆர்டர் கேன்சல் ஆகிவிடும். அதனால், மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு மேம்பாலம் அமைத்தால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் சென்றுவிடலாம்" என்கிறார் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து தொழில் செய்யும் வினோத்.

"இந்தியாவில் தமிழ்நாடு மிக முன்னேற்றமான, அனைத்து தொழில் திறனையும் பெற்றுள்ள முதல் மாநிலமாக திகழ்கிறது. ஆடை, உற்பத்தி, தோல் உற்பத்தி, தானியங்கி எந்திர உதிரி பாகங்கள் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த பணிகள், சுகாதாரம் ஆகிய துறைகளின் முதலீட்டில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது". என்று தமிழக முதலமைச்சர் சொல்லும் வார்த்தைகளை கேட்டால் காதுகளுக்கு நன்றாக இருக்கிறது. ஆனால் செயலில் இல்லையே. என்று கவலையுடன் சொல்கிறார் சுரேஷ். (நிறுவனம் நஷ்டமடைந்து கவலையில் இருப்பவர்)

"நம்ம தமிழர்கள் தொழில் தொடங்க வேண்டும் என்றால், லட்சக்கணக்கில் லஞ்சம் கேட்கிறார்கள். மின் இணைப்புக்கும் லஞ்சம். முதலில் எங்களை கவனியுங்கள். அப்புறம் வெளிநாட்டு கம்பெனிகளை கூப்பிடுங்கள்". என்கிறார் பிரகாஷ் (புதியதாக தொழில் தொடங்கியவர்).

தமிழ் மக்களுக்கு நல்லது செய்கிறேனு சொல்லுறீங்களே. இதுதானா?. இந்த குறைகளை நிவர்த்தி செய்யுங்கள். நிச்சயம் தமிழ்நாடு முன்னேற்றம் அடையும்.

வந்தாரை மட்டும் வாழ வைக்கும் தமிழ்நாடுனு மாத்திருவாங்களோ..

No comments:

Post a Comment