சாதாரண குடும்பத்தில் பிறந்தவன், சுரேஷ். தந்தை இரண்டு வருடத்திற்கு முன் விபத்தில் இறந்துவிட்டார். தாய் சுதா, கூலி வேலை செய்துவருகிறார். சுரேஷ், தனியார் நிறுவனம் ஒன்றில் சூப்பர்வைசர் வேலை செய்துவருகிறான். வேலைக்கு, தினமும் காலை 09 மணி அளவில் கம்பெனிக்கு சென்றிடுவான். மே 11 ஆம் தேதி அன்று கம்பெனிக்கு செல்லும் வழியில், அவன் மீது லாரி மோதியது. காலில் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும், 1 லட்சம் வரை செலவு ஆகும் என்று டாக்டர் சொல்கிறார். தாயிடம் வெறு 100 ரூபாய் மட்டுமே உள்ளது. சுதாவிற்கு என்ன செய்வது என்று புரியவில்லை. உதவி செய்ய, சுரேஷ் வேலை பார்த்துவரும் கம்பெனியும் முன்வரவில்லை. அதனால், சுரேஷின் காலில் அறுவை சிகிச்சை செய்ய முடியவில்லை. அவனுக்கு வயது 23, நடக்க முடியாது, வேலைக்கும் செல்ல முடியாது. ஒரு லட்சம் இருந்திருந்தால், நிச்சயம் சுரேஷ் வேலைக்கு சென்றிருப்பான். தாயின் கனவும் நிறைவேறியிருக்கும்.
சுரேஷ் மற்றும் அவனது தாய் போன்று நிறைய குடும்பங்கள் இதுபோன்று
பிரச்சனைகளில் இருப்பார்கள். திடீரென்று லட்சக்கணக்கில் பணம் யார் தருவார்கள். இனி
கவலை வேண்டாம். வருடத்திற்கு 12 ரூபாய் மட்டும் செலுத்தினால், 2 லட்சம் வரை வாங்கிக் கொள்ளலாம்.
யார் இந்தத் திட்டங்களில் சேரலாம்?.
இந்தியாவில் வங்கிக் கணக்குள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
ஏழை, பணக்காரர், வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளவர் என்று எந்தப் பாகுபாடுமின்றி
இத்திட்டத்தில் சேரலாம். ஒருவருக்கு ஒரு மருத்துவ காப்பீடு மட்டுமே. ஏதேனும் ஒரு
தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் இத்திட்டம் செயல்படும். வங்கியில் ஒரு சேமிப்பு அக்கவுண்ட்
வைத்திருந்தால் மட்டுமே இத்திட்டத்தில் இணைய முடியும். 18 லிருந்து 70
வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
2015 மே மாதத்துக்குள் விண்ணப்பித்தால் யார் வேண்டுமானாலும்,
எந்த ஹெல்த் டிக்ளரேஷனும் இன்றித் திட்டத்தில் இணையலாம். ஜூன் 1, 2015 அன்று முதல் ஆகஸ்ட் 31, 2015
வரை திட்டத்தில் இணைபவர்கள் ஹெல்த் டிக்ளரேஷன் வழங்க வேண்டி இருக்கும்.
விண்ணப்பங்கள் எங்கே கிடைக்கும்?
இந்தத் திட்டத்தை அரசு மற்றும் தனியார் துறை நிதி நிறுவனங்களான வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விண்ணப்பங்களை வழங்கி வருகிறது. விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து வங்கிக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சென்று சமர்பித்தால் போதுமானது.
பிரீமியம் செலுத்தும்
முறை?
பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா
(PMSBY) திட்டத்தில் ஆண்டுக்கு 12 ரூபாய் பிரீமியமாக செலுத்த
வேண்டும். ஆட்டோமெட்டிக்
டெபிட் என்கிற முறையில் வங்கி சேமிப்பு கணிக்கிலிருந்து வருடம்
ஒருமுறை பிரீமியம் வசூலிக்கப்படும். விண்ணப்பத்திலேயே
ஆட்டோமெட்டிக் டெபிட் செய்யச் சம்மதிப்பதாக ஒரு டிக்ளரேஷன் இருக்கும். 31 மே 2015 வரை விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து வங்கிகளில் சமர்பிக்கும்போது
ஒரு ரசீது வழங்கப்படும்.
இது திட்டத்தில் இணைந்ததற்கான ஆதாரம். ஆனால் 01 ஜீன் 2015-ல் இருந்துதான் வங்கிக் கணக்குகளின் மூலம் பிரீமியம் ஆட்டோமெட்டிக் டெபிட் செய்யப்படும்.
வங்கிக் கணக்கிலிருந்து பணம் பிரீமியமாகச் செலுத்தப்பட்டபின் வங்கி, ரசீதை வழங்கும்.
இந்த ரசீதுதான் நீங்கள் பிரீமியம் செலுத்தியதற்கான ஒரே ஆதாரம்.
12 ரூபாய் எதற்கு?.
இன்சுரன்ஸ் கம்பெனிக்கு – 10 ரூபாய், ஏஜென்சி செலவுக்கு – 01 ரூபாய், வங்கியின்
நிர்வாகத்துக்கு – 01 ரூபாய். ஆக மொத்தம் 12 ரூபாய்.
புதுப்பிப்பது எப்படி?.
நீங்கள் பூர்த்திச் செய்யும் விண்ணப்பத்தில் மின்னஞ்சல் முகவரி, செல்போன் நம்பர் போன்ற விவரங்களைக் கொடுக்க
வேண்டும். இந்த வருடம் விண்ணப்பத்தைக் கொடுத்துத் திட்டத்தில் இணைந்தபின், அடுத்த வருடத்திலிருந்து ஜூன் 1-ம் தேதிக்கு முன் வங்கி சேமிப்புக் கணக்கில் உள்ள தொகையில் பிரீமியத்தை ஆட்டோமெட்டிக் டெபிட் செய்து, அதற்கான ரசீதை மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் அனுப்பி
வைக்கப்படும்.
ஒருவேளை இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்த வங்கிக் கணக்கை கையாள முடியாமல் போனால், எந்த வருடத்துக்குப் பிரீமியம் செலுத்தப்பட்டிருக்கிறதோ, அந்த வருடம் முழுவதுமாக (அதாவது, ஜூன் 1 முதல் மே வரை 31) அந்த வங்கிக் கணக்கு மூலம் க்ளெய்ம் கிடைக்கும். மீண்டும் வேறு ஒரு வங்கிக் கணக்கு மூலம் புதிதாக விண்ணப்பத்தைப் பூர்த்திச் செய்து இந்த இன்ஷூரன்ஸ் திட்டங்களில் இணையலாம்.
யாரிடம் க்ளெய்ம் கேட்க வேண்டும்?
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்துத் வங்கிகளோடும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. உதாரணமாக, கனரா வங்கி, எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. கனரா வங்கி மூலம் ஒருவர் இந்தத் திட்டத்தில் இணைந்தால், அவர் எல்ஐசி இன்ஷூரன்ஸ் நிறுவனத்திடம்தான் க்ளெய்ம் சார்ந்த விவரங்களைப் பெறமுடியும். அதுபோல், நீங்கள் எந்த வங்கிக் கணக்கை பயன்படுத்தி, இந்த இன்ஷூரன்ஸ் திட்டத்தில் சேர்ந்திருக்கிறீர்களோ, அந்த வங்கி எந்த இன்ஷூரன்ஸ் நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறதோ, அந்த நிறுவனம் உங்களுக்கு க்ளெய்ம் வழங்கும்.
க்ளெம் எவ்வளவு?
இந்தத் திட்டம் 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் துவங்குகிறது. எனவே, 2015 ஜூன் மாதத்திலிருந்துதான் க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்துக்கு எந்தக் காத்திருப்பு காலமும் கிடையாது என்பதே இதன் முக்கிய அம்சம்.
சுரக்ஷா இன்ஷூரன்ஸ் திட்டத்தில் இணைந்தவர்கள் இறந்துவிட்டால் அல்லது விபத்தில் சிக்கி நிரந்தர ஊனம் (Full disablement), அதாவது இரண்டு கை அல்லது இரண்டு கால் அல்லது இரண்டு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால் 2 லட்சம் ரூபாய் முழுமையாக க்ளெய்ம் கிடைக்கும். விபத்தில் சிக்கி பகுதி ஊனம் (Partial disablement) அதாவது, ஒரு கை அல்லது ஒரு கால் அல்லது ஒரு கண் முழுமையாகச் செயல்படாமல் போனால், ஒரு லட்சம் ரூபாய் வரை க்ளெய்ம் கிடைக்கும். இந்தத் திட்டத்தில் க்ளெய்ம் பெற காவல் துறையிலிருந்து முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்), போஸ்ட் மார்டம் அறிக்கை போன்றவைகளை வங்கியிடம் சமர்பிக்க வேண்டும். மற்றபடி சட்டரீதியான விஷயங்கள் சரியாக இருக்க வேண்டும். உதாரணமாக, வாகனம் ஓட்டும்போது, ஒட்டுநர் உரிமம் சரியாக இருக்க வேண்டும்; மது அருந்தி இருக்கக் கூடாது. இந்தத் திட்டத்தில் சுயமாக ஏற்படுத்திக் கொண்ட விபத்துக்களுக்கு (Self Injury) க்ளெய்ம் கிடைக்காது.
ஒரு முறை க்ளைம் செய்தால், அடுத்தமுறை?.
ஒருமுறை க்ளெய்ம் செய்தால், அடுத்த வருடம் தொடர்ந்து பிரீமியம் செலுத்துவதன் மூலம் திட்டம் தொடரும். எனவே, மீண்டும் புதிதாக விண்ணப்பம் கொடுத்துத் திட்டத்தில் இணைய வேண்டும் என்கிற அவசியம் இல்லை.
இத்திட்டம் எப்போது ரத்து ஆகும்?
நீங்கள் எந்த வங்கிக் கிளையின் மூலம் இந்தத் திட்டத்தில் இணைகிறீர்களோ, அதே வங்கியில்தான் திட்டத்தைத் தொடர வேண்டும்.
பிரீமியத்தைக் கட்டவில்லை என்றால் நீங்கள் இணைந்த திட்டம் ரத்து ஆகிவிடும். அதேபோன்று, 70
வயதிற்கு மேற்பட்டால் பாலிசிகள் காலாவதியாகிவிடும்.
குடும்பத்தில் இருப்பவர்களை அவசர காலங்களில் காப்பாற்றுவதற்கு, ஒரு
சிறந்த திட்டம் இது. (எதிர்கால நலன் கருதி வெளியிடுவோர் கொங்குமலர்.காம்)
No comments:
Post a Comment