வறுமையோடு போராடினாலும் கல்வியின் துணை கொண்டு உயர்ந்து, இன்று கோடீஸ்வரராகத் திகழும் ஒருவர் அதே கல்விக்காக உதவிக்கரம் நீட்டுகிறார்.
அம்பாசமுத்தில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்த அந்தச் சிறுவன் படித்த பள்ளிக்கு ஒரு நாள், அந்த ஊர் தாசில்தாரான அவனது அப்பாவின் ஜீப் வருகிறது. அப்பா அழைத்து வரச்சொன்னதாக அதன் டிரைவர் சொல்கிறார். எதோ வெளியூர் கூட்டிப் போகத்தான் அப்பா அழைத்துவரச் சொல்லியிருப்பார் என்று ஆசையோடு ஜீப்பில் அமர்கிறான் அவன். ஆனால் அந்த ஜீப் போனதோ அவர்களின் சொந்த கிராமமான காட்டுமன்னார் என்கிற கிராமத்திற்கு. ’வருடா வருடம் ஆண்டு விடுமுறை நாட்களில் பாட்டியைப் பார்க்கத்தானே இங்கே வருவோம்; இப்போ எதற்கு?’ என்ற குழப்பத்தில் கீழிறங்கிய அவன் பார்த்த காட்சி, அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
வெள்ளைத் துணியில் போர்த்திய அவனது அப்பாவின் உடல், வீட்டில் கிடத்தப்பட்டிருக்க, பாட்டி, அம்மா உட்பட சகோதர சகோதரியின் அழுகைக் குரல். பதினான்கு வயதில் அவன் சந்தித்த தன் அப்பாவின் இழப்பு, அவனுக்குள் பலவிதமான போராட்டத்தின் ஆரம்பமாக இருந்திருக்கிறது. பாசமான அப்பா, இன்னொரு புறம் மதுவுக்கு அடிமையாக இருந்ததும், அவரது குடி, தங்கள் குடியையே கெட்டழிய வைத்திருக்கிறது என்கிற உண்மையும் மெல்ல மெல்ல அவனுக்குப் புரிய வருகிறது. அம்பாசமுத்திரத்தில் அழகான அரசாங்க குவார்ட்டர்ஸ் வீடு, சுற்றிலும் மரங்கள், விளையாட நண்பர்கள், பள்ளிக்குப் போகவர ஜீப், அடிக்கடி சினிமா, ஷாப்பிங், வீட்டு வேலைகளின் உதவிக்கு அப்பாவின் பியூன் என்று போய்க் கொண்டிருந்த நாட்கள், ஒரே நாளில் திசை மாறிப் போனது.
கிராமத்து வீடு, சோகம் தோய்ந்த உற்வுகளின் முகங்கள் என்ற அந்தக் குடும்பப் பின்னணி, கொஞ்சம் கொஞ்சமாக வறுமையின் கோரப்பிடியால் வளைக்கப்பட்டிருக்கிறது. சேகரித்து வைத்திருந்த நகைகளில் துவங்கி, வீட்டிலிருந்த சோபா, கட்டில், பீரோ, ரேடியோ என்று ஒவ்வொன்றாக அடகுக் கடைக்குப் போயிருக்கிறது. அடுத்து சில்வர் பாத்திரங்கள். 1995ல் அப்பாவின் பென்சன் தொகையான வெறும் 420 ரூபாயில் ஏழு ஜீவன்கள் சாப்பிட வேண்டிய சூழ்நிலை. ரேஷன் கடைக்குப் போய் அரிசி வாங்குவது, மளிகைக் கடையில் கடன் சொல்லி சாமான்கள் வாங்கி வருவது என்று அந்தச் சிறுவனின் மனசில் பல வறுமைச் சம்பவங்கள் ஆழமான வடுவாகப் படிந்து போகின்றன.
ஒரு தீபாவளிக்காக, ப்ளஸ் டூ படிக்கிற இவனுக்கு மட்டும் அம்மா பேண்ட் சட்டைத் துணி எடுத்துத் தந்திருக்கிறார். அம்பாசமுத்திரம் முருகன் டெய்லர்ஸில் தையல் கூலி கொடுத்து அதை வாங்க இயலாத நிலை. கடைசியில் ’’கூலியாக பேண்ட் துணியை வைத்துக் கொள்ளுங்கள் சட்டையை மட்டும் தைத்துக் கொடுங்கள்’’ என்று கெஞ்சிக் கூத்தாடி, சட்டை வாங்கி வந்திருக்கிறான், தீபாவளி முடிந்து மூன்று நாட்கள் கழித்து!
ஒருநாள் வீட்டுக்கு வந்த நண்பர்களை உபசரித்து சாப்பாடு போடக்கூட வீட்டில் அரிசி இல்லை. உடனே அம்மா இரண்டு சில்வர் தட்டுகளைக் கொடுத்து அடகு வைத்துவிட்டு அரிசி வாங்கிவரச் சொல்கிறார். நண்பர்களுக்குத் தெரியாமல் அரைமணி நேரத்தில் அடுத்த தெருவில் இருக்கும் பொன்னம்மா கிழவியிடம் அந்தத் தட்டுகளை அடகுவைத்து அந்த பணத்தில் அரிசி வாங்கி வந்து கொடுத்திருக்கிறான்.
சமையல் ரெடி. ஆனால் சாப்பிட தட்டுகள் இல்லை. ஆனால் அம்மா புத்திசாலித்தனமாய் சாப்பாட்டை ஒரு பாத்திரத்தில் பிசைந்து நிலாச்சோறு மாதிரி அனைவருக்கும் உருட்டிக் கொடுக்க நண்பர்கள் அம்மாவின் பாசத்தைப் பாராட்டி சந்தோஷமாகச் சாப்பிட்டுக் கிளம்பியிருக்கிறார்கள்.
இப்படி பல சம்பவங்கள். படித்துப் பெரியவனாகி அம்மாவையும் உடன் பிறந்தவர்களையும் தன்னைப் போல வறுமையில் வாடுகிற மாணவர்களையும் நல்ல நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்கிற அந்தச் சிறுவன் கல்யாணராமனின் மனசில் ஒரு வைராக்கியம் பிறந்திருக்கிறது. அதற்கு ஒரே வழியான கல்வி என்கிற சூத்திரத்தைப் பிடித்துக் கொண்ட கல்யாணராமனின் கவனம் முழுதும் படிப்பிலேயே ஆழ்ந்திருக்கிறது. பள்ளிப் படிப்பில் நல்ல மார்க் எடுத்ததால் சுலபத்தில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அப்போது கல்லூரியில் கிடைத்த அரசு ஊக்கத்தொகை உதவியோடு படிப்பு தொடர்ந்தாலும், கிழிந்த ஆடைகளைத் தைத்துப்போட்டே பல நாட்கள் வகுப்புக்கு சென்று வந்திருக்கிறார். கையில் காசு இல்லாமல் பசி மயக்கத்திலேயே தூங்கிய பல இரவுகளும் உண்டு.
ஒருவழியாய் கல்யாணராமனின் பெயருக்குப் பின்னால் என்ஜினீயரிங் பட்டப் படிப்பும் சேர்ந்திருக்கிறது. அதற்கேற்ற வேலையாக மும்பை டாட்டா கன்சல்டன்ஸியில் வேலை கிடைத்திருக்கிறது. ஆனால் தங்குவதற்கு குறைந்த செலவில் அறை கிடைக்காததால் முதல் மூன்று மாதங்கள் ரயில்வே ஸ்டேஷனிலேயே படுத்துக் குளித்து வேலைக்குப் போய் வந்திருக்கிறார்.
1992க்குப் பின்னர்தான் அவரது வாழ்வில் பலவித ஏற்றங்களும் வர ஆரம்பித்திருக்கின்றன. சாப்ட்வேர் தொழில் நுட்பத்தில் அவருக்கு இருந்த ஆர்வம், அவரை அமெரிக்க மண்ணில் இறக்கி விட்டிருக்கிறது. அங்கே சுமாராகப் போய்க் கொண்டிருந்த பல நிறுவனங்களின் வருட வருமானம் கல்யாணராமனின் கடின உழைப்பால் டாப் ரேங்கிற்கு வந்திருக்கின்றன. 23 மூன்று வயதிலேயே அங்கே உள்ள முன்னணி கம்பெனிகளில் உயர்ந்த பதவிக்கு வந்திருக்கிறார். அதன்பின்னர் இவர் நண்பர்களோடு இணைந்து வாஷிங்டன் அருகில் ஷீட்டல் நகரில் ஆரம்பித்த ’குலோபல் ஸ்காலர்’ என்ற சாப்ட்வேர் நிறுவனத்தின் இன்றைய வருட பண சுழற்சி மட்டும் 160 கோடிகளை எட்டியிருக்கிறது! அமெரிக்காவில் மூன்று, இந்தியாவில் ஒன்றுமாக இதன் கிளைகள் இயங்குகின்றன.
’’நவீன டெக்னாலஜிகளைப் பயன்படுத்தி குவாலிட்டியான டீச்சிங் முறைகளுக்காக எனது நிறுவனம் அந்த சாப்ட்வேரை வெளியிட்டது. கிண்டர் கார்டன் முதல் காலேஜ் வரை அதற்குக் கிடைத்த வரவேற்பால் இன்று அமெரிக்கா முழுதும் 8 கோடி மாணவர்கள் பலனடைந்திருக்கிறார்கள். கடுமையான வறுமையிலும் கல்வி ஒன்றால் மட்டுமே இந்த நிலைக்கு உயர்ந்திருக்கும் நான், அதே கல்வியை இந்திய மாணவர்களும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் பலவித திட்டங்கள் தீட்டி உதவி வருகிறேன்.’’ என்கிறார் மிகவும் அடக்கமாக.
இன்று அமெரிக்காவில் மனைவி விஜயலஷ்மி மற்றும் ஒரு மகள் ஒரு மகனோடு கோடிஸ்வரராக வாழும் கல்யாணராமன், தமிழ் மண்ணை மறந்துவிடவில்லை. தமிழகத்தில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் உட்பட சுமார் 2,000 பேருக்கு இதுவரை கல்வி உதவி புரிந்திருக்கிறார். அதில் பல டாக்டர்களும் என்ஜினீயர்களும்கூட அடக்கம். இவரது சொந்த ஏரியாவான அம்பாசமுத்திரத்தைச் சுற்றியுள்ள பல கல்வி நிறுவனங்கள், அனாதை இல்லங்களைத் தத்தெடுத்திருக்கிறார். இந்தக் கல்வி உதவிக்காக மட்டும் வருடத்திற்கு ஒரு கோடி ரூபாய் வரை செலவிடுவதாகத் தெரிவிக்கிறார். இதற்காக வரிச்சலுகை எதுவும் எதிர்பார்க்காத இவர், ’’நான் வரியாக செலுத்தும் தொகைகூட நாட்டிலிலுள்ள ஏழைகளுக்குத்தான் பயன்படப் போகிறது.’’ என்று விளக்கமளிக்கிறார்.
ஏழைப் பெண் குழந்தைகள் என்றால் கல்யாணராமனுக்குத் தனி கரிசனம். அவர்களுக்காக உதவி புரிவதை மிகப் பெரிய பாக்கியமாக கருதுகிறார். ’’என் குரு, தெய்வம், வழிகாட்டி எல்லாமே ஒரு பெண்ணான என் தாய் சீதாலஷ்மிதான். எந்தப் பெண்களுக்கும் செய்யும் உதவியை என் தாய்க்குச் செய்யும் சேவையாய் நினைக்கிறேன்” என்கிற கல்யாணராமன், தன் ஆரம்பக் காலத்தைப் போல வறுமையின் போராட்டத்திலும் கல்வியின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் தகுதியான ஏழை மாணவர்கள் தன்னைத் தொடர்பு கொண்டால், அவர்களுக்குத் தாராளமாக உதவக் காத்திருப்பதாகத் தெரிவிக்கிறார்.
’அன்னச்சத்திரம் ஆயிரம் கட்டல்
ஆலயம் பதினாயிரம் நட்டல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்’ என்ற பாரதியின் வரிகளுக்கு உயிர் கொடுத்துவரும் கல்யாணராமனின் கல்வி மீதான உண்மையான அக்கறை, ஆயிரக்கணக்கான மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றப் போவது உறுதி.
கல்யாணராமனின் தொடர்புக்கு: Kal@globalscholar.com
No comments:
Post a Comment