2015 ஆம் ஆண்டில் ஏராளமான இன்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதா?.. 2016 ஆம் ஆண்டில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் அட்மிஷன் சூடுபிடிக்குமா?. என்ஜினீயரிங் நிலைமையை எடுத்துச்சொல்லும் ஒரு முக்கிய சர்வே.


"அண்ணா பல்கலை மற்றும் அதன் இணைப்பிலுள்ள 550 என்ஜினீயரிங் கல்லுாரிகளில், பி.இ - பி.டெக்., படிப்புகளுக்கான 2015-2016 ஆம் ஆண்டு பொது கலந்தாய்வில் ஒரு லட்சத்து, 1,620 இடங்கள் நிரம்பின. 91 ஆயிரம் இடங்கள் காலியாகின. அதனால், பல தனியார் என்ஜினீயரிங் கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்தன. பல கல்லுாரிகள் புதிய பாடப்பிரிவை துவங்கும் முடிவை கை விட்டன. குறைவான மாணவர் சேர்க்கை கொண்ட பாடப்பிரிவுகளை மூடவும், கலை கல்லுாரிகளாக மாற்றவும் முடிவெடுத்தன. ஆனால், இந்த ஆண்டு ஏராளமான என்ஜினீயரிங் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளதால் நிலைமை மாறி உள்ளது. இதன் மூலம், வரும் கல்வி ஆண்டில் என்ஜினீயரிங் படிப்புகளுக்கு மீண்டும் பிரகாசமான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் தர ஏராளமான நிறுவனங்கள் முன் வந்து, 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும் வளாக நேர்காணல் நடத்துகின்றன. 'டி.சி.எஸ், காக்னிசன்ட், இன்போசிஸ், மைக்ரோசாப்ட், டெக் மகேந்திரா' உள்ளிட்ட பல ஐ.டி நிறுவனங்களும், 'கோர்' நிறுவனங்கள் என்று அழைக்கப்படும், 'எல் அண்டு டி.,ரெனோ நிசான், பவர்கிரிட் கார்ப்பரேஷன், ஹுண்டாய், என்.எல்.சி.,' உள்ளிட்ட பல துறை நிறுவனங்களும் வேலைவாய்ப்புகளை அள்ளித் தருகின்றன. அண்ணா பல்கலையில் உள்ள கிண்டி இன்ஜி., கல்லுாரி, எம்.ஐ.டி., கல்லுாரி ஏ.சி.டெக்., திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு கல்லுாரி போன்றவற்றில், இதுவரை நடந்த, இரண்டு வகை வளாக நேர்காணலில், இறுதி ஆண்டு படிக்கும், 1,500 பேர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர்.
எஸ்.ஆர்.எம்., பல்கலை, வி.ஐ.டி., பல்கலை மற்றும் அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, சென்னை மற்றும் புறநகரிலுள்ள தனியார் இன்ஜி., கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு, வளாக நேர்காணலில் பணி வாய்ப்புகள் அளிக்கப்பட்டு உள்ளன. இதுவரை, 25 ஆயிரம் பேர்
பணி ஆணை பெற்றுள்ளனர். சென்னையில் நடந்த சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டுக்கு பின், தமிழகத்திலுள்ள பல பெரிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் வர்த்தகத்தை விரிவுபடுத்தியதால், கூடுதலாக ஆட்கள் எடுப்பதாக, இன்ஜி., கல்லுாரியினர் தெரிவித்தனர். புதிதாக துவங்கப்படும், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களும், அதிக அளவு பணி வாய்ப்பு அளித்துள்ளன. ந்த எழுச்சியால், சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள தனியார் இன்ஜி., கல்லுாரிகளில் மீண்டும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர், தற்போதே இன்ஜி., கல்லுாரிகளின் கல்வித்திறன், கட்டமைப்பு, ஆசிரியர்களின் கல்வித்தகுதி மற்றும் வேலை வாய்ப்பு அளிப்பு போன்றவற்றை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளனர். தரமான கல்லுாரிகளை பெற்றோர்களும், மாணவர்களும் தேர்வு செய்ய வேண்டும் என, கல்வியாளர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். கல்லுாரிகளுக்குச் நேரில் சென்று கல்லுாரிகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், அங்கு படிக்கும் மாணவர்களிடமும் பேசி தகவல்களை திரட்டிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளனர்" என்று ஒரு தமிழ் பத்திரிக்கையில் செய்திய வெளியிட்டிருந்தார்கள். இந்த செய்தியை எடுத்துக்கொண்டு கொங்குமலர் சார்பாக சர்வே மற்றும் கருத்துக்களை கீழே பதிவு செய்துள்ளோம். 

என்ஜினீயரிங் கல்லூரிகளில் படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளத்தால், 2016-2017 கல்வியாண்டில் அட்மிசன் பிரகாசமாக இருக்கும் என்று பொய் சொல்லி பள்ளி மாணவர்களையும், பெற்றோர்களையும் ஏமாற்ற நினைக்கும் பத்திரிக்கையை என்ன செய்வது. இந்த கட்டுரைக்கு என்ஜினீயரிங் கல்லூரிகளிடம் எவ்வளவு பணம் வாங்குனார்களோ தெரியவில்லை. நிஜமாகவே படித்தவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டதா?. எத்தனை மாணவர்களிடம் கேட்டு எழுதினார்கள்?. வேலை கிடைக்காமல் சில என்ஜினீயரிங் மாணவர்கள் செக்யூரிட்டி வேலைக்கும், டிரைவர் வேலைக்கும் சென்று வருகிறார்கள். வேலையில்லாத மாணவர்களை பார்த்தால் விளையாட்டாக போய்விட்டதா?. என்ஜினீயரிங் மாணவர்கள் என்றால் அப்ரண்டீஸ் வேலைக்கு கூட எடுக்க யோசிக்கும் நிறுவனங்கள் எப்படி லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை கொடுப்பார்கள். தரமான கல்வியை கொடுத்துவரும் என்ஜினீயரிங் கல்லூரிகள் விளம்பரம் செய்வதே இல்லை. கோடிக்கணக்கில் சம்பாதிக்கலாம் என்று 200 ஆக இருந்த கல்லூரிகளை 550 க்கு கொண்டுவந்தது யார்?. காய்கறி விற்கும் மார்க்கெட் போன்று என்ஜினீயரிங் கல்லூரிகளை கட்டி லட்சக்கணக்கான மாணவர்களை ஏமாற்றி வருகிறார்கள். கல்லூரிகள் அட்மிசனிற்கு பணம் கொடுத்து விளம்பரம் செய்வதற்கு பதில், அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வியும், வேலையும் பெற்றுத் தந்தால் அட்மிசன் தானாகவே அதிகரிக்கும்.      

அந்த தமிழ் பத்திரிக்கையின் செய்தியை படிக்க இதை கிளிக் செய்யவும்