ஈரோட்டிற்கு எப்போது தீர்வு கிடைக்கும்?. இனிமேலும் மக்கள் அமைதியாக இருக்கமாட்டார்கள்...

1967 ஆம் ஆண்டில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்வதற்காக, நம் முன்னோர்களால் சூரம்பட்டியில் ஒரு அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளன. மழை காலங்களில் அணையில் இருந்து ஈரோடைகளுக்கும், பெரும்பள்ளம் - நஞ்சை ஊத்துக்குளி வாய்காலுக்கும் நீர் சென்று ஈரோடு மாவட்டத்தில் விவசாயம் சற்று அதிகமாகவே இருந்துவந்தன. 

1998 ஆம் ஆண்டில் இருந்து நஞ்சை ஊத்துக்குளி வாய்காலையும், ஈரோடைகளையும் ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டார்கள். இதில் அரசியல்வாதிகளின் பங்குகள் தான் அதிகம். கவுன்சிலர் முதல் அமைச்சர்கள் வரை, அரசு நிலங்களை பிளாட் போட்டு விற்று இருக்கிறார்கள். மக்களும் ஏமாந்து வாங்கியிருக்கிறார்கள் என்பதே வருத்தப்பட வேண்டிய நிலை. பட்டா இல்லாத நிலங்களுக்கும் மின்சார வசதி, குடிநீர் வசதி என்று தமிழக அரசால் சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன என்று சிலரால் கூறப்படுகின்றன. ஈரோட்டில் இந்த ஆக்கிரமிப்புகள் தற்போது தலைவிரித்து ஆடிக்கொண்டு வருகிறது. ஆம், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சாக்கடைக்கழிவு நீரை நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் விடுகிறார்கள். சிலர் வாய்காலில் தண்ணீர் செல்லாதவாறு குப்பைகளையும் கொட்டுகிறார்கள். கடந்த 5 ஆண்டுகளாக நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் சாக்கடை நீர் மட்டுமே, விவசாயத்திற்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விவசாய நிலங்களுக்கு, தண்ணீர் கிடைக்காமல் விவசாயமும் பாதிக்கப்பட்டன. விவசாயிகளின் பல போராட்டங்களுக்கு நடுவில், சமூக ஆர்வலர்கள் முன்வந்து ஈரோடு மாவட்ட அதிகாரிகள் உதவியுடன் டிசம்பர் 10, 2015 ஆம் ஆண்டில் இருந்து ஒளிரும் ஈரோடு மற்றும் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலை சுத்தம் செய்துவருகிறார்கள். இதுவரை அரசிடன் இருந்து ஒரு நிதியும் கிடைக்கவில்லை என்றாலும், 20 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார்கள். வாய்க்காலை சுத்தம் செய்வதுடன், வாய்க்கால் நிலங்களையும் சுத்தம் செய்துவருகிறார்கள். பத்து பைசா கூட அரசு தரப்பில் இருந்து நிதி வரவில்லை என்றாலும் அரசியல்வாதிகளால் இடையூறு குறைவதில்லை. ஆக்கிரமிப்புகள் எடுத்தால் மட்டுமே சுத்தம் செய்ய முடியும் என்கிற நிலையில் இருந்து வரும் நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசியல்வாதிகள் இடையூறு செய்கிறார்கள். இதை தடுக்க அரசியல்வாதிகள் யார்?. தடுப்பவர்கள் தான், ஆக்கிரமிப்பு செய்வதற்கு உடந்தையா என்று சமூக அர்வலர்களின் குரலாக இருந்து வருகிறது...

 

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு என்ன தயக்கம்?.

நஞ்சை ஊத்துக்குளி வாய்க்காலை கடந்த 8 ஆண்டுகளாக பராமரிப்பு செய்யாமல் இருந்துவந்த பொதுப்பணித்துறை. இன்றும் சமூக ஆர்வலர்கள் சுத்தம் செய்யவில்லை என்றால், ஈரோட்டில் தண்ணீருக்கு பதிலாக சாக்கடை நீரைத்தால் குடிக்க வேண்டும். ஓடைகளை சுத்தம் செய்ய ஒரு குழுவினர்கள், வாய்க்காலை சுத்தம் செய்ய மற்றொரு குழுவினர் என்று பிரித்துக்கொண்டு சுத்தம் செய்துவருகிறார்கள். அரசு சார்பாக பணம் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, உதவியாவது செய்யலாமே. ஆக்கிரமிப்புகளை இப்படியே விட்டால், மறுபடியும் அசுத்தம் தான் ஏற்படும். ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு மாற்று அரசு நிலமே இல்லையா?. அரசு வாய்க்கால் நிலத்தில் அபார்ட்மெண்ட் கட்டி ஆக்கிரமிப்பவர்கள் நிஜமாகவே ஏழையா?. ஏற்கனவே இடம் வைத்திருப்பவர்கள் தான் அதிகமான ஆக்கிரமிப்புகளை செய்திருக்கிறார்கள். இடம் இல்லாதவர்களை கண்டுபிடித்து வேறு இடம் கொடுத்து, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நினைத்தால் முடியும்.. ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்றால், நிச்சயமாக அரசுக்கு உதவி செய்ய எந்த சமூக ஆர்வலரும் வர மாட்டார்கள் என்பதே மக்களின் கருத்து. 100 ஓட்டுக்கு ஆசைப்பட்டு லட்சக்கணக்கான ஓட்டுகளை இழந்துவிடாமல் இருக்க வேண்டும் என்றால், அரசியல் வாதிகள் இதில் தலையிடக்கூடாது என்பதே மக்களின் குரலாகவும் இருந்துவருகிறது....