வேலையில்லாப் பட்டதாரிகளுக்கான வாழ்வுரிமைமீட்புப் போராட்டம்: நடக்கவிருக்கும் அமைதிவழி அறப் போராட்டத்தில் அனைத்து பட்டதாரிகளும் ஒன்றுகூடுவோம்! அரசாங்கத்திற்கு நமது அவலங்களைப் புரியவைப்போம்! நமது வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்!!!

இளைஞர்களே... இன்றல்ல, நேற்றல்ல. கடந்த பல வருடங்களாக தமிழக இளைஞர்களுக்கு இருக்கும் மிகப்பெரும் பிரச்சனை வேலையில்லாத் திண்டாட்டம். கல்லூரியைப் பற்றி இல்லாததும் பொல்லாததும் சொல்லி விளம்பரம் செய்து ஆள் பிடிக்கும் கல்லூரி நிர்வாகங்கள் சொல்லியதில் ஒரு சதவீதத்தைக் கூட செய்வதில்லை. நாட்டில் அனைத்துக் கல்லூரிகளும் 100% வேலைவாய்ப்பு என்று விளம்பரம் செய்கின்றன. அப்படியென்றால் பட்டம் படித்து முடித்து சென்னையில் வேலையின்றி, தெருத்தெருவாய் சுற்றித்திரியும் நாம் எந்த நாட்டுக் கல்லூரியில் படித்தோம்?

ஒவ்வொரு வருடமும் படித்துமுடித்துவிட்டு கல்லூரிவிட்டு வெளியேறும் அனைத்து துறை மாணவர்களும் வேலைதேடி சென்னை நோக்கிப் படையெடுத்தவண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தியடைகின்றனவா என்பது நாம் ஒவ்வொருவருக்கும் தெரியும். இன்று நாம் படும் அதே இன்னல்களை கல்லூரியின் அடுத்த ஆண்டு மாணவர்களும் அடைகின்றனர். இது தொடர்கதையாகிறது. இதற்கு ஒரு முடிவே இல்லையா?

வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர வேண்டிய கடமைகொண்ட அரசாங்கம் என்ன செய்கிறது? முதலில் அரசாங்கத்தின் கண்களில் நாம் படுகிறோமா?

அரசாங்கத்தின் கண்களில் நமது அவலங்கள் பட்டால்தானே நமது கஷ்டம் அவர்களுக்கு புரியும். நமது அவலங்களின் உரக்கக் கூறினால்தானே அவர்களது காதில் விழும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

இதுவரை அனைத்துவித பிரச்சனைகளுக்கும் இந்த நாட்டில் போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஆனால் வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு ஒரு விடிவுதேடி எந்தவொரு அமைப்பாவது கட்சியாவது போராடியுள்ளதா? இல்லை. நமக்கு நாம்தான் போராட வேண்டும்.

இதோ நமது அவலங்களை எடுத்துக்கூறுவதற்கான முதல் முயற்சி. சென்னையில் பட்டம் படித்துமுடித்துவிட்டு தகுதியான வேலையின்றித் தவித்துக்கொண்டிருக்கும் பட்டதாரிகள் அனைவரும் இணைந்து அமைதியான முறையில் நமது அவலங்களை அரசாங்கத்திற்கு எடுத்துக்கூறப் போகிறோம்.

அதன் முதற்கட்டமாக வரும் ஜூன் 21, 2015 அன்று சென்னை மெரினாவில் வேலையில்லாப் பட்டதாரிகள் இணைந்து "பட்டதாரிச் சான்றிதழுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் போராட்டம்" அமைதியான முறையில் நடைபெற இருக்கிறது. இது நமது மனக்குமுறலை அரசாங்கத்திற்கு எடுத்துரைக்கும் ஒரு எளிய முதல்வழி. அரசு செவிகளுக்கு இச்செய்தி எட்டும் பட்சத்தில் வேலையில்லாப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண அரசு முற்பட வாய்ப்பிருக்கிறது. அரசு செவிசாய்க்க மறுத்தால் தொடர்ந்து இதுபோல பல்வேறு அமைதிவழிப் போராட்டங்கள் மூலம் நமது இன்னல்களை அரசிடம் பதிவு செய்வோம்.

நண்பர்களே... பொறுத்தது போதும். இன்னும் எத்தனைக் காலத்திற்கு இந்தக் கொடுமை? இதற்கொரு முடிவுகட்டுவதற்கான நேரம் வந்துவிட்டது. நடக்கவிருக்கும் அமைதிவழி அறப் போராட்டத்தில் அனைத்து பட்டதாரிகளும் ஒன்றுகூடுவோம்! அரசாங்கத்திற்கு நமது அவலங்களைப் புரியவைப்போம்! நமது வாழ்வுரிமையை மீட்டெடுப்போம்!!!

படையெடுங்கள் மெரினா நோக்கி, கையில் பட்டதாரிச் சான்றிதழின் ஒரே ஒரு நகலுடன்... (பட்டதாரிச் சான்றிதழ் இல்லாதபட்சத்தில் ஏதேனும் ஒரு கல்லூரிச் சான்றிதழின் நகல் போதுமானது)

--மாணவர் இளைஞர் சமூக இயக்கம், சென்னை.

தொடர்புக்கு: 98-40-166986,  99-52-610443, 90-92-969173

#RIPDEGREE

அனைத்து நண்பர்களும் தயவுசெய்து இச்செய்தியை சமூகவலைத்தளங்களில்

#RIPDEGREE என்ற அடையாளத்துடன் பகிர்ந்து, தகவல் அனைவரையும் சென்றடைய உதவுங்கள்.

No comments:

Post a Comment